- 28 May, 2026
தூத்துக்குடி, மே 28, 2026: வருகின்ற 2027 மார்ச் 26 ஆம் நாள் கடைபிடிக்கப்பட உள்ள புனித வெள்ளியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மதுவிலக்கு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் , சபா நாயகர் ஜே.சி.டி. பிராபகர் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுபடுத்தும் புனித வெள்ளியானது கிறிஸ்தவ மக்களால் மிக முக்கிய புனித நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் இரத்ததான முகாம்கள், அமைதிப் பேரணிகள், சிலுவைப் பாதை ஊர்வலங்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இத்தகைய புனிதமான நாளில் மதுக்கடைகள் இயங்குவது சமூக அமைதிக்கு இடையூறாக அமையும் என்பதால், மதுக்கடைகளை மூடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே புனித வெள்ளியன்று மதுக்கடைகள் மூடப்படுகின்றன. அதேபோல், தமிழகத்திலும் மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி மற்றும் வள்ளலார் நினைவு நாட்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் மதுக்கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்படுவதை சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், அந்த அரசின் கொள்கை முடிவை வரவேற்பதாகவும், அதே வரிசையில் புனித வெள்ளியையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன்வைத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிறுபான்மையினர் நல ஆணையர் அருள்தந்தை ஜோ அருன் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் இந்த கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பூரண மதுவிலக்கை நோக்கிய அரசின் நடவடிக்கைகளை மனமுவந்து பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள், புனித வெள்ளியை முன்னிட்டு சட்டமன்றத்தில் 110 விதிகளின்படி சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்து, மதுக்கடைகளை மூடுவதை அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புனித வெள்ளி அன்று அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதன் மூலம், மக்களின் சமய மற்றும் கலாச்சார விழாக்கள் மாண்புடனும் அமைதியுடனும் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- Catholic Connect Reporter
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP