- 04 April, 2026
இயேசுவால் 'பாறை' என வர்ணிக்கப்பட்ட பேதுரு பயத்தால் தன் தலைவனை தெரியாது என்று நாகூசாமல் பொய் சொல்லி வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்துகின்றார். அடித்தளம் சற்று ஆட்டம் கண்டது இயேசுவின் பாடுகளின்போது தான். எனினும் எழுந்து நின்ற பேதுருவை பற்றி இங்கு பார்ப்போம்.
காதை வெட்டியவர் (யோவா 18:10-11)
இயேசுவை கைது செய்வதற்காக ஏராளமான படைவீரர்கள் பயங்கரமான ஆயுதங்களோடு வந்தார்கள். பேதுரு நிலைமையின் உக்கிரத்தை உடனடியாக புரிந்து கொள்கிறார். இயேசுவை அவர்கள் கைது செய்து விடக்கூடாது என்ற வெறி அவருக்குள் தொற்றிக்கொள்கிறது. ஏராளமானவர்கள் இருக்கிறார்களே என பேதுரு பயப்படவில்லை, பயங்கரமான ஆயுதங்கள் இருக்கின்றனவே எனவும் கண்டுக்கொள்ளவில்லை. தற்பாதுகாப்புக்காக தான் கொண்டு வந்திருந்த வாளை எடுத்து, மால்கு என்ற தலைமைக்குருவின் பணியாளரை தாக்குகிறார். அவரது வலக்காதானது துண்டிக்கப்பட்டு நிலத்தில் விழுகிறது.
இங்கு பேதுருவுக்கு வேறு எந்த சிந்தனையும் மனதில் ஓடவில்லை எப்படியாவது இயேசுவை காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியம் தான் கண் முன் நின்றது. அறிவை விட உணர்வுக்கு முன்னிலை கொடுக்கிறார். எல்லாரும், ஏன் இயேசுவும் பக்கத்தில் நிற்கிறாரே என்ற தைரியம் அவரை இவ்வாறு செய்ய வைக்கிறது. இயேசு தன்னை காப்பற்றுவார் என்று கூட பேதுரு நினைத்திருக்கலாம். ஆனால் பேதுரு, இயேசுவின் உண்மையான நிலையை ஏற்க மறுக்கிறார். அவர் பாடுகள் அனுபவிக்க கூடாது என்று எண்ணுகிறார். இது தவறு என அவர் புரிந்து கொள்ளவில்லை.
சாகத் தயார் என்றவர் (லூக் 22:31-34)
பேதுரு அனுபவிக்கப்போகும் துன்பங்களைப் பற்றி இயேசு முன்னறிவிக்கிறார். கோதுமையானது சிதைக்கப்படுவது போல, சாத்தான் உன்னையும் சிதைப்பான் என்று இயேசு சொல்கிறார்.
இதைக் கேட்ட பேதுரு ஒரு நிமிடம் ஆடிப் போகிறார். உடனே அவர் இயேசுவை பார்த்து, நான் உமக்காக என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்வேன், உமக்காக கைது செய்யப்பட்டாலும், உமக்காக சாக நேர்ந்தாலும் அது என் பாக்கியம் என்று சொல்கிறார். அது வெறும் வெற்றுப்பேச்சு என்று இயேசுவுக்குத் தெரியும். நிலைமை மோசமானால் எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்பது பேதுருவுக்கு
அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மறுதலிக்கிறார்: (லூக் 22:54-62)
பாறை என்று இயேசுவால் வர்ணிக்கப்பட்ட பேதுரு, ஆவேசமாக காதை வெட்டிய பேதுரு, உமக்காக சாகுவதற்கும் தயார் என்று சொல்லிய பேதுரு, இப்போது தலைகீழாக மாறி போகிறார். பேதுருவும் இயேசுவும் நெருங்கிய நண்பர்கள் என்று பணிப்பெண்ணும், காது வெட்டப்பட்ட மால்குவின் உறவினரும், தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தவர்களும் சொன்னபோது பயந்து போய் எனக்கு தெரியவே தெரியாது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் சபித்து, பொய்யாணையும் போடுகிறார். பாடுகளை ஏற்க மனமின்றி வெளிநடப்பு செய்கிறார்.
நான்
1. பேசி வித்தை காட்டுவான், ஆனால் செயலில் ஒன்றும் இல்லை என்ற நிலையில் வாழ்கின்றேனா!
2. குடும்பத்திற்காக எல்லாம் செய்வேன் என்று நம்பத் தகுந்த வாக்குறுதி கொடுத்து விட்டு நிலைமை மோசமானால் வாபஸ் வாங்குகிறேனா!
3. அவசரப்பட்டு வாக்கு கொடுத்து அல்லது செயலை ஆரம்பித்து முடிக்க முடியாமல் நிற்கின்றேனா!
4. சோதனைகள் வரும்போது தப்பித்துக்கொள்ள காரணங்களை தேடி அலைகின்றேனா! சிந்திப்போம்.
- அருள்பணி குலசை பெலிக்ஸ் HGN
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP