image

புனித வெள்ளி “மூன்று மரங்கள் – மீட்பின் பாதை”

புனித வெள்ளி நாளில் நாம் இயேசுவின் பாடுகளையும் சிலுவை மரணத்தையும் நினைவுகூர்கிறோம். மனித குலத்தின் மீட்பு இயேசு சுமந்த சிலுவையின் வழியாகவே நமக்கு கிடைத்தது. திருவிவிலியத்தில் காணப்படும் மூன்று முக்கியமான மரங்கள் இன்று நமக்கு ஒரு ஆழமான ஆன்மிகப் பாடத்தை வழங்குகின்றன.


பழுத்த மரம் – பாவத்தின் நுழைவாயில்

தொடக்க நூலில் நாம் வாசிக்கின்ற ஏதேன் தோட்டத்தில் இருந்த நன்மை தீமை அறியும் மரம் மனிதனை பாவத்திற்குள் நுழைத்த மரமாக அமைந்தது (தொ.நூ 3). அந்தப் பழம் பார்ப்பதற்கு அழகாகவும் சுவையாகவும் இருந்தது. ஆனால் அந்த மரத்தின் வழியாகவே பாவமும் மனிதனின் வீழ்ச்சியும் உலகிற்குள் வந்தது.


இன்றும் நம்முடைய வாழ்க்கையிலும் பல “பழுத்த மரங்கள்” இருக்கின்றன.

அவை கவர்ச்சியாகத் தோன்றினாலும், அவை நம்மை பாவத்திற்குள் இழுத்துச் செல்லக்கூடும். அத்தகைய தருணங்களில், இயேசு சுமந்த சிலுவை மரத்தை நினைத்து, பாவத்திலிருந்து மீட்கும் அருளை நாம் வேண்டிக்கொள்ள வேண்டும்.


பட்ட மரம் – சாபத்தின் நுழைவாயில்

நற்செய்தியில், இயேசு இலைகள் நிறைந்திருந்த அத்திமரத்தை பார்த்தார். ஆனால் அதில் கனிகள் இல்லை. (மாற்கு 11-13) அதனால் அந்த மரம் பட்ட மரமாக மாறியது இது ஒரு உருவகம். இது கனிகள் இல்லாத நம்பிக்கையையும், வெளிப்படையாக மட்டும் தோன்றும் ஆன்மிக வாழ்க்கையையும் சுட்டிக்காட்டுகிறது.


இன்றும் நம்முடைய நம்பிக்கை வாழ்க்கை சில நேரங்களில் இலைகள் போல வெளிப்படையாக இருக்கலாம்; ஆனால் கனிகள் இல்லாமல் போகலாம். அன்பு, இரக்கம், மன்னிப்பு, சேவை போன்ற ஆவியின் கனிகளை தரும் வாழ்க்கைக்கு இயேசுவின் சிலுவை நம்மை அழைக்கிறது.


தூய மரம் – விண்ணுலகத்தின் நுழைவாயில்

பழங்காலத்தில் சிலுவை மரம் குற்றவாளிகளுக்கான அவமானமான மரமாகக் கருதப்பட்டது. ஆனால் இயேசு அதில் தம் உயிரை அர்ப்பணித்ததால் அது தூய மரமாகவும், மீட்பின் அடையாளமாகவும் மாறியது. இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட கள்வன், அந்த இறுதி நொடியில் இயேசுவை உண்மையான மெசியா என்று உணர்ந்து, பின்பு அவன், ' இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ' என்றான். அதற்கு இயேசு அவனிடம், ' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ' என்றார். லூக்கா 23:43 அவ்வாறு, சிலுவை மரம் விண்ணுலகத்தின் நுழைவாயிலாக மாறியது.


முடிவு

புனித வெள்ளி நமக்கு தரும் பெரிய பாடம் என்னவென்றால்: பாவத்திற்குள் இழுக்கும் பழுத்த மரங்களை விட்டு விலக வேண்டும். கனியில்லாத பட்ட மரமாக இல்லாமல், நன்மை கனிகள் தரும் வாழ்க்கை வாழ வேண்டும். முக்கியமாக, இயேசுவின் தூய சிலுவையை பற்றிப் பிடித்து, அதின் வழியாக மீட்பையும் விண்ணுலக வாழ்வையும் பெற வேண்டும்.


- அருள்பணி K.அருள் ஜேசுதாஸ்

செயலர் , திருவழிபாட்டுப் பணிக்குழு

சென்னை மயிலை உயர்மறை மாவட்டம்

அலைபேசி எண் :+91 97899 85013

k.aruljesudoss@gmail.com

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP