- 04 April, 2026
இயேசு பிறந்த நேரத்தில் அரசனாக இருந்த பெரிய ஏரோதின் மகன் தான் இந்த ஏரோது அந்திப்பா. இவன் தாயார் பெயர் மால்தஸ். இவனுக்கு இரண்டு சகோதரர்கள் முறையே: அர்க்கெலா மற்றும் பிலிப்பு. இந்த பிலிப்பின் மனைவியை தான் தன்னுடைய மனைவியாக மாற்றிக்கொண்டான் ஏரோது, அவள் பெயர் ஏரோதியா.
ஏரோது அந்திப்பா, சிறந்த ஒரு அரசியல் நிர்வாகி என்று உரோமை அரசிடம் பெயர் எடுத்தவன். தன் பதவி நிலைக்க எது வேண்டுமானாலும் செய்பவன். "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று மொழிந்த திருமுழுக்கு யோவானை கைது செய்து சிறையில் அடைத்ததோடு மட்டுமல்லாமல், அவர் தலையை வெட்டிக் கொலை செய்தவனும் இந்த ஏரோது அந்திப்பா தான். இவன் எவ்வாறு இயேசுவுக்கு பாடுகளைக் கொடுத்தான் என்பதை இப்போது பார்க்க இருக்கின்றோம்.
குறுநில மன்னன் ஏரோது அந்திப்பா (மத் 14:1)
இயேசுவை கைது செய்த தலைமைச்சங்க காவலர்கள் அவரை பிலாத்துவிடம் ஒப்படைத்தார்கள். இயேசு கலிலேயா பகுதியை சார்ந்தவர் என்பதை உணர்ந்த பிலாத்து அவரை ஏரோதுவிடம் அனுப்புகிறான். ஏனெனில் ஏரோது கலிலேயா பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தவன். இயேசு ஏரோதுவின் ஆட்சி எல்லைக்கு உட்பட்டவர் என்பதால் பிலாத்து இந்நிலையை எடுத்தான். இயேசுவை காண ஏரோது பெரும் விருப்பமாக இருந்தான் என்பதை விவிலிய நூலின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம் (லுாக் 23:8). சுமார் 30 வருடங்களுக்கு முன் ஏரோது அந்திப்பாவின் தந்தை பெரிய ஏரோது, இயேசுவைக் கொலை செய்ய வேண்டும் என்று விரும்பி காவலர்களை அனுப்பினான். ஆனால் இயேசுவின் பெற்றோர் அவரை எகிப்துக்கு அழைத்துச்சென்று காப்பாற்றினார்கள். இப்போது அவனது மகன் வாயிலாக வரலாறு மீண்டும் திரும்பியது. அதோடு, அதுவரை பூர்வஜென்ம எதிரிகளான பிலாத்துவும், ஏரோதுவும் அன்று தான் நண்பர்களாக மாறினார்கள் (லூக் 23:12).
விசாரணை (லூக் 23:6-11)
ஏரோது அந்திப்பா, இயேசுவைக் காண நெடுங்காலமாய் விருப்பமாக இருந்தவன். இப்போது சூழ்நிலைக் கைதியாக இயேசு ஏரோதுவின் முன் நிற்கிறார். ஏரோது, இயேசுவை ஒரு
மாயாஜாலகாரராக நினைத்தான். ஏதாவது மாயாஜாலம் செய்வார் அதை பார்த்து மகிழ்ச்சி அடையலாம் என்று நினைத்து அவரை சோதித்துப் பார்க்க நினைத்தான் இயேசு அவனுக்காக எந்த பதிலும் கொடுக்கவில்லை.
பிலாத்து, இயேசுவை ஒரு குற்றவாளியாக ஏரோதுவிடம் அனுப்பினார். அதை விசாரித்து பார்த்து விடுதலை வழங்க ஏரோது முன்வரவில்லை. மாறாக தன் பதவியை தக்க வைக்க குற்றம் சுமத்துபவர்களுடன் இணைந்து கொள்கிறான். தன் படைவீரர்களோடு இணைந்து இயேசுவை இகழ்ந்து ஏளனம் செய்கிறான். அதோடு மட்டுமல்லாமல் அவரை அரசராக சித்தரிக்க பளபளப்பான ஆடையை உடுத்துகிறான் மீண்டும் பிலாத்துவிடம் கையளிக்கிறான்.
நான்
1. நன்றாக இருக்க வேண்டும் என்பதற்க்காக எத்தனை குடும்பங்களை சிதைத்திருக்கிறேன்!
2. என் பதவிக்கு களங்கம் வரக்கூடாது என்பதற்க்காக அல்லது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்க்காக எத்தனை மனிதர்களின் நற்பெயரை கெடுத்திருக்கிறேன்!
3. உதவி என்று வருபவர்களை என் சொந்த ஆதாயத்திற்க்காக பயன்படுத்தி அவர்களின்
மனிதமாண்பை சிதறடித்திருக்கிறேன்!
4. என் மீது எந்த குற்றமும் வரக்கூடாது என்பதற்க்காக எத்தனை முறை பொறுப்பை பிறரிடம் ஒப்படைத்திருக்கிறேன்! சிந்திப்போம்.
- அருள்பணி குலசை பெலிக்ஸ் HGN
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP