image

தமிழ்நாடு மண்டல வின்சென்ட் தே பவுல் சபையின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது

உதகை, மார்ச் 2, 2026: உதகை மறைமாவட்டம் கோத்தகிரி மவுண்டன் தொன் போஸ்கோ கன்வென்ஷன் வளாகத்தில் தமிழ்நாடு மண்டல வின்சென்ட் தே பவுல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மண்டலங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.


நிகழ்வுகள் 28ஆம் தேதி சனிக்கிழமை காலை தொடங்கியது. நிகழ்வின் துவக்கமாக தமிழ்நாடு மாநில வின்சென்ட் தே பவுல் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அருள்தந்தை ஸ்டார்வின் (தூத்துக்குடி மறைமாவட்டம்) அவர்கள் துவக்க உரையாற்றி ஆசிர் அளித்தார்கள்.


சபையில் நல்லுறவின் அவசியம், வின்செந்திய ஆன்மீகம், வின்செந்திய அடிப்படைநோக்கம், சபையின் செயல்பாடுகளில் சந்திப்பின் முக்கியத்துவம், வின்செந்திய தலைவர்களுக்கான பண்புகள், வின்சென்ந்திய அழைப்பு, சபையில் வரவு செலவுகளை கையாளுதல், வின்செந்திய வாழ்வில் கையேட்டின் பங்கு என பல தலைப்புகளில் அமர்வுகள் பல பொறுப்பாளர்களின் விரிவான விளக்கங்களுடன் நடைபெற்றது.


மண்டல குழுவின் தலையான நோக்கமான வின்சென்ட் தே பவுல் கையேடு பல திருத்தங்களுடன் புதியதாக வெளியிடப்பட்டது. முதல் பிரதியை இந்திய தேசிய சபை தலைவர் சகோதரர் ஜுட் மங்கள்ராஜ் அவர்கள் வெளியிட சகோதரர் ஜோசப் பாண்டியன் மற்றும் சகோதரர் முனைவர் பிரான்சிஸ் பெற்றுக் கொண்டனர்.


அருள்தந்தை ராபர்ட் அல்போன்ஸ் அவர்கள் வழிநடத்திய நற்கருணை ஆசீருடன் முதல் நாள் அமர்வு நிறைவு பெற்றது.


இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை முதல் அமர்வாக அருள் சகோதரி லாலி ஸ்டெல்லா, கோத்தகிரி அவர்கள் வழி நடத்திய உறவாய் ஒரு மணி நேரம் என்ற ஜெப அமர்வு துவக்கமாக அமைந்தது.


பின்னர் சபையில் பெண்களின் பங்களிப்பு. நாளைய வின்செந்தியம் இளைஞர் கையில், இளம் வின்செந்தியமே நம் வருங்காலம், இன்றைய சூழ்நிலையில் பாதுகாப்பின் அவசியம், என்ற தலைப்புகளில் அமர்வுகளில் நடைபெற்றது.


அருள்தந்தை ஸ்டார்வின் அவர்களின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு திருப்பலியில் அனைத்து மண்டல பொறுப்பாளர்களும் பக்தியோடு பங்கேற்றனர்.


இந்திய தேசிய சபை செயலர் மாணிக்கம் மற்றும் உலக சபை தீர்ப்பாய நடுவர் சகோதரர் ஜோசப் பாண்டியன் இருவரின் வாழ்த்துரைகளும், இந்திய தேசிய சபை தலைவர் ஜூட் மங்கள் ராஜு அவர்களின் தலைமை உரையுடனும் கூட்டம் இனிதே நிறைவுற்றது.


செய்தியாளர்: கஸ்மீர் ரோச்

படங்கள் உதவி : கான்ஸ்டன்

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP