- 04 April, 2026
தமிழ்நாடு, பிப்ரவரி 28, 2026: இந்தியாவின் முதல் பொதுநிலை கத்தோலிக்க புனிதரான புனித தேவசகாயம் பிள்ளையின் உலகளாவிய பக்தியை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பன்னாட்டு திருத்தலத்தின் வளர்ச்சியை வழிநடத்த தந்தை லார்ட் வின்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த முயற்சியானது புனித தேவசகாயம் மலை திருத்தலத்தை மையமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மறைசாட்சி இடமாகும், மேலும் இங்குக் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் புனிதப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உரோமில் உள்ள கிளாரட்டியன் பொது மறைபரப்பு அலுவலகத்தில் (Claretian General Mission Procure) பத்து ஆண்டுகள் பணியாற்றியஅருள்தந்தை வின்னர், தனது இந்த பணியைப் பற்றிக் கூறிய போது இந்த நியமனத்தைத் தனது பணியின் ஒரு முக்கிய புதிய கட்டமாக விவரித்தார். கிளாரட்டியன் சபையில் பணி ஒருங்கிணைப்பு, திட்ட மேம்பாடு, நிதி திரட்டுதல் மற்றும் பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் அவருக்கு இருந்த அனுபவம், இந்தத் திருத்தலத்தை ஒரு பன்னாட்டு புனிதப் பயண மையமாக விரிவாக்கம் செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள இந்த திருத்தலம் 1752-ஆம் ஆண்டில் புனிதர் மறைசாட்சியாக மரித்த இடமாகும். ஆரல்வாய்மொழிக்கு அருகிலுள்ள காற்றாடிமலையில் அமைந்துள்ள புனித தேவசகாயம் மலையானது துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் விசுவாசத்தில் உறுதியாக நின்ற புனிதரின் சாட்சிய வாழ்வை நினைவுகூரும் ஒரு முக்கிய இடமாக நீண்டகாலமாகத் திகழ்கிறது.
புனித தேவசகாயம் மீதான பக்தி மற்றும் வியாகுல மாதாவின் பரிந்துரையை நாடி ஏராளமான புனிதப் பயணிகள் தொடர்ந்து இந்த மலைக்கு வருகை தருகின்றனர். இந்தத் தளம் அந்தப் பகுதி மற்றும் கலாச்சார எல்லைகளைக் கடந்து, விசுவாசிகள் மற்றும் பல்வேறு பின்னணியைக் கொண்டவர்களை வரவேற்கும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறி வருகிறது.
பன்னாட்டு திருத்தலத்தின் வளர்ச்சியானது புனித தேவசகாயம் பிள்ளையின் சாட்சிய வாழ்விற்கு உலகளாவிய அங்கீகாரத்தை மேம்படுத்தும் என்றும், அவரது துணிவு, விசுவாசம் மற்றும் விடாமுயற்சி போன்ற மரபுகளை ஆழப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சபை இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் வேளையில், தேவசகாயம் மலை பன்னாட்டு புனிதப் பயண வரைபடத்தில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கத் தயாராக உள்ளது.
- கத்தோலிக்க கனெக்ட் செய்தியாளர்
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP