image

மே மாதத்திற்கான திருத்தந்தையின் செபக் கருத்து

வத்திக்கான், மே 6, 2026: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அன்றாட உணவிற்காகத் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அனைவரும் உணவு பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த மே மாதத்தில் கத்தோலிக்கர்கள் அனைவரும் இறைவனிடம் வேண்டுமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அழைப்பு விடுத்துள்ளார்.


திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்பால் வெளியிடப்பட்ட மாதாந்திர "திருத்தந்தையோடு இணைந்து செபிப்போம்" என்ற காணொளியில், ஒருபுறம் மிகுதியான உணவும் மறுபுறம் கடும் தேவையும் நிலவும் தற்போதைய ஏற்றத்தாழ்வுகள் குறித்து திருத்தந்தை தனது வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார். உணவு வீணாக்கப்படுவது ஒருபுறம் தொடர, மறுபுறம் பட்டினி பரவி வருவது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.


விழிப்புணர்வு பரப்புரை மற்றும் உணவு உதவி முயற்சிகள் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுக்குமாறு நம்பிக்கையாளர்களுக்கு திருத்தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் கோடிக்கணக்கான மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ள நேரிடும் என உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ள சூழலில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திருத்தந்தையோடு இணைந்து செபிப்போம்


தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே. ஆமென்.


படைப்பின் இறைவனே,

நீர் எங்களுக்கு வளமான பூமியைத் தந்தீர், உமது அன்பு மற்றும் பராமரிப்பின் அடையாளமாக எங்களின் அன்றாட உணவையும் தந்தீர்.


இன்று எமது மேசைகளில் பல பொருட்கள் வீணாக்கப்படும் அதே வேளையில்,

கோடிக்கணக்கான சகோதர சகோதரிகள் தொடர்ந்து பசியால் அவதிப்படுவதை வருத்தத்துடன் உணர்கிறோம்.


எங்களுக்குள் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியருளும்:

ஒவ்வொரு உணவிற்கும் நன்றி செலுத்தவும்,

எளிமையாக உட்கொள்ளவும்,

மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளவும்,

பூமியின் கனிகளை உமது கொடையாகப் போற்றவும் நாங்கள் கற்றுக்கொள்வோம்.


இவை சிலருக்காக மட்டும் அல்ல, அனைவருக்கும் உரியவை என்பதை உணரச் செய்யும்.


நல்ல தந்தையே,

சுயநல நுகர்வுப் போக்கை மாற்றி, ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கும் கலாச்சாரமாக மாற்ற எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கும்.

விழிப்புணர்வு பிரச்சாரங்கள், உணவு வங்கிகள் மற்றும் நிதானமான, பொறுப்புணர்வுள்ள வாழ்க்கை முறை போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களை எங்கள் சமூகங்கள் ஊக்குவிக்கச் செய்யும்.


உலகின் வாழ்விற்காகப் உடைக்கப்பட்ட அப்பமான உமது அன்பு மகன் இயேசுவை எங்களுக்குத் தந்தவரே,

நீதிக்கான பசியும், சகோதரத்துவத்திற்கான தாகமும் கொண்ட ஒரு புதிய இதயத்தை எங்களுக்குத் தந்தருளும்.

பொதுவான உணவிலிருந்து எவரும் விலக்கப்படாமல் இருக்கச் செய்யும்.


உணவை வெறும் நுகர்வுப் பொருளாகப் பார்க்காமல், ஒன்றிப்பு மற்றும் அக்கறையின் அடையாளமாகப் பார்க்க உமது தூய ஆவியார் எங்களுக்குக் கற்றுக்கொடுப்பாராக.

ஆமென்.


Courtesy: Vatican News

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP