- 04 April, 2026
வத்திக்கான், நவம்பர் 20, 2025:
இரண்டாவது உலக குழந்தைகள் தினத்தின் கொண்டாட்டங்கள் 2026 செப்டம்பர் 25 முதல் 27 வரை உரோம் நகரில் நடைபெறும் என்பதை திருத்தந்தை 14ம் லியோ அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். புதன்கிழமை பொது மக்கள் சந்திப்பின்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது, 2026 கொண்டாட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இலச்சினை இடம்பெற்றிருந்த ஒரு கொடியை அவர் ஆசீர்வதித்து கையெழுத்திட்டார்.
இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளிடையே உரையாற்றிய திருத்தந்தை, குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நிகழ்வின்போது அவர்களைச் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார். பின்னர், காஸாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன், மஜ்ட் பெர்னார்ட், உலக குழந்தைகள் தினத்திற்கான (WCD) பாப்பிறைக்குழு (Pontifical Committee) தலைவர் அருள்பணி. என்ஸோ ஃபோர்டுனாடோ, OFM Conv. அவர்களுடன் அந்தக் கொடியை திருத்தந்தையிடம் வழங்கினான்.
அந்தக்குழு வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியின்படி, உலக குழந்தைகள் தினம் "உலகெங்கிலும் உள்ள குழந்தைகளையும் அவர்களின் குடும்பங்களையும் உள்ளடக்கிய சந்திப்பு, பிரார்த்தனை மற்றும் கொண்டாட்டத்தின் ஒரு தருணமாக" இருக்கும்.
பொது நிலையினர், குடும்பம் மற்றும் வாழ்க்கைக்கான பேராயத்தின் (Dicastery for Laity, Family, and Life) தலைவர் கர்தினால் கெவின் ஃபாரெல், குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நலனில் கவனம் செலுத்துவதற்கான திருச்சபையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். வீட்டிலிருந்து, தெரிந்த இடங்களில், மற்றும் பரந்த உலகம் முழுவதும் தொடங்கும் அமைதியின் மதிப்பை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"அமைதியின் மதிப்பை குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள், மேலும் தங்கள் பெற்றோர் மூலமாகவோ அல்லது அவர்களைச் சுற்றியுள்ள சூழலிலோ முரண்களை உணரும்போது அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்," என்று கர்தினால் ஃபாரெல் கூறினார்.
இரண்டாவது WCD "திருச்சபைக்கு குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நெருக்கத்தைக் காட்டுவதற்கும், அவர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதற்கும் ஒரு அழகான வாய்ப்பை வழங்குகிறது" என்றும் அவர் மேலும் கூறினார்.
திருத்தந்தையிடம் வழங்கப்பட்ட கொடியில் இடம்பெற்றிருந்த 2026 நிகழ்விற்கான இலச்சினையில், ஏழு கண்டங்களைக் குறிக்கும் ஏழு கால் தடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கால் தடங்கள், "சிறுவயதின் எளிமையான மற்றும் உண்மையான சைகைகளை" அடையாளப்படுத்துகின்றன என்றும், இளம் வயதினரின் உலகளாவிய தன்மையையும் தூய்மையையும் பிரதிபலிக்கின்றன என்றும் பத்திரிகைச் செய்தி குறிப்பிடுகிறது. இலச்சினையின் வண்ணங்கள் கலாச்சாரப் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் ஒற்றுமையையும் வேறுபாடுகளை மதிப்பதையும் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடம் (Dome) உருவமும் அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது, இது "உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வரவேற்றுப் பாதுகாக்கும்" ஒரு அடையாளப்பூர்வமான அணைப்பைக் குறிக்கிறது. மேலும், சிலுவை கிறிஸ்துவின் பாடுகளையும் உயிர்த்தெழுதலையும் நினைவூட்டுகிறது.
2024-இல் நடைபெற்ற முதல் உலக குழந்தைகள் தினத்தில், 101 நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 1,00,000 குழந்தைகள் கலந்துகொண்டனர். 2026-இல் இரண்டாவது உலக குழந்தைகள் தினத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அமைதி, வரவேற்பு மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்திற்காக ஏங்கும் உலகின் கதாநாயகர்களாகக் கருதப்படும் குழந்தைகளின் குரல்களைக் கேட்பதற்கும் மதிப்பதற்கும் ஆன தனது உறுதிப்பாட்டை திருச்சபை மீண்டும் வலியுறுத்துகிறது.
மூலம்: வத்திக்கான் செய்திகள்
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP