- 22 April, 2026
பொந்தியு பிலாத்து, யூதேயா பகுதியில் ஆளுநராக இருந்தான். இவன் ஆளுநராக இருந்த காலக்கட்டத்தில் யூத மக்கள் மிகவும் இன்னலுற்றனர். இவன் யாருக்கும் வளைந்து கொடுக்காத கொடிய மனம் படைத்தவனாக இருந்து வந்தான். யூதர்களை இரக்கமின்றி படுகொலை செய்தான். யூதர்களின் தேவாலயமான எருசலேமிலிருந்து பணத்தை சுரண்டி குடிநீர் வழங்க கால்வாய் அமைத்தான். இது யூதர்களுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. தனக்கு எதிராக அல்லது அதிகாரத்திற்கு எதிராக யாராவது கலகம் செய்தால் அவர்களை கொலை செய்து விடுவான். “பலி செலுத்திய கலிலேயரை பிலாத்து கொன்றான்" என்று (லூக் 13:1) விவிலியம் சொல்வதும் இதற்கு சிறந்த சான்றாகும். இறுதியாக இவன் வாழ்வு தற்கொலையில் நிறைவு பெற்றது. இவன் எவ்வாறு இயேசுவுக்கு பாடுகளை கொடுத்தான் என்பதை இங்கு பார்ப்போம்.
முதல்கட்ட விசாரணை: (லூக் 23:1-7)
தலைமைக்குரு அன்னா இயேசுவை பிலாத்துவிடம் ஒப்படைக்கிறான். பிலாத்துவின் முன் இயேசு ஒரு குற்றவாளியாக நிற்கிறார். வந்திருந்த மக்கள் இயேசுவின் மீது குற்றசாட்டுகளை அள்ளி வீசுகின்றார்கள். இவன் மக்களை சீரழிக்கிறான், சீசருக்கு வரி செலுத்தக்கூடாது என்கிறான், மெசியாவாகிய அரசன் நான் என்று சொல்கிறான் என அடுக்கடுக்காய் குற்றம் சுமத்திய நேரத்தில் பிலாத்து இயேசுவிடம் கேட்ட கேள்வி, 'நீ யூதர்களின் அரசனா?' அதற்கு இயேசு, “அரசன் என்பதை நீர் சொல்கிறீர்" என்று சொல்லி விட்டு அமைதி காக்கிறார். பிலாத்துவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை எனவே இயேசுவை விடுவிக்க வேண்டுமென்று எண்ணுகிறான். இதற்கு காரணம் பிலாத்துவின் மனைவி கிளவுதியா புரோகியூலா. இவள் இயேசுவை விடுதலை செய்யுங்கள் என்று தன் கணவனிடம் ஆளனுப்பி சொன்னாள் (மத் 27:19). அடுத்ததாக பொறாமையால்தான் யூதர்கள் இயேசுவை தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்றும் பிலாத்துவுக்கு தெரிந்திருந்தது (மத் 27:79). எனினும் விசாரணையில் இழுபறி நீடித்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான். அப்போது தான் இயேசு கலிலேயா பகுதியை சார்ந்தவர் என்று கேள்விப்பட்டு அவரை ஏரோதிடம் அனுப்புகிறான்.
இரண்டாம் கட்ட விசாரணை: (லூக் 23:13-25)
இயேசுவை விடுவிக்க வழி தேடிய பிலாத்து, அதற்கு வழி இல்லாத காரணத்தால் இயேசுவை சிலுவையில் அறைய கையளிக்கிறான். ஏனெனில் யூதர்களுக்கு பிலாத்து அஞ்சினான் தன் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ எனவும் கவலை கொண்டான். எனவே இயேசுவை சாட்டையால் அடிக்க செய்தான். முள்முடியை தலையில் வைக்க செய்தான். யூதர்களின் அரசே வாழி என கேலிக்குட்படுத்தினான். உன்னை விடுவிக்கவும் சிலுவையில் அறைந்து கொலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு என்று கொக்கரித்தான் (யோவா 19:10). இறுதியாக இயேசுவை சிலுவையில் அறைய கையளிக்கிறான். உண்மை என்று இயேசு சொன்னதன் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் "உண்மையா” அதுவென்னவென்று கேட்டு இயேசுவை பாடாய்படுத்தினான்.
நான்
1. உண்மையை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் பொய்யாக வாழ்ந்திருக்கிறேன்!
2. உண்மைக்கு சாவுமணி அடித்திருக்கிறேன்!
3. என் பதவிக்கு ஆபத்து நேரக்கூடாது என்பதற்காக பிறரை பழிவாங்கியிருக்கிறேன்!
4. நன்மை செய்ய எனக்கு அதிகாரம் இருந்ததும் அதை தவறாக பயன்படுத்தி இருக்கிறேன்.
5. பிற மனிதர்களின் நிகழ்வுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்திருக்கிறேன்.
6. இந்நிலைகளிலிருந்து மாற விரும்புகிறேன்.
- அருள்பணி குலசை பெலிக்ஸ் HGN
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP