image

ஆன்மீகமும் உற்சாகமும் சங்கமித்த திருச்சி சலேசிய மறைமாநிலத்தின் பீடப் பணியாளர் மாநாடு

மதுரை, செப்டம்பர் 29, 2026: திருச்சி சலேசிய மறைமாநிலத்திற்கு உட்பட்ட கிறிஸ்தோதயம் நற்செய்திப் பணி மற்றும் மறைக்கல்விப் பணி மையத்தின் ஏற்பாட்டில், சிறப்புமிக்க 'பீடப் பணியாளர் மாநாடு 2026' மதுரை தொன் போஸ்கோ தொழிற்பயிற்சிப் பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இம்மாநாட்டில், இப்பகுதிக்கு உட்பட்ட 10 பங்குகளில் இருந்து 117 ஆர்வமுள்ள பீடப் பணியாளர் சிறுவர் சிறுமியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.


மாநாட்டின் முதல் நாள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன் மிகவும் சுறுசுறுப்பாகத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆன்மீக பலம் சேர்க்கும் வகையில் பக்தி நிறைந்த நற்கருணை ஆராதனையும், சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கண்கவர் கலைவிழாவும் நடைபெற்றன.


இரண்டாம் நாளின் சிறப்பம்சமாக, பீடப்பணியாளர் சீருடையில் மிளிர்ந்த 117 சிறுவர் சிறுமியர்கள் பங்கேற்ற ஜெபமாலை திருப்பயணம் அமைந்தது. தொன் போஸ்கோ ITI-யிலிருந்து புறப்பட்ட இந்த பவணியில், தங்களது பங்கின் பெயர்கள், இறைவார்த்தைகள் மற்றும் மரியன்னை முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு லூர்து அன்னை திருத்தலத்திற்கு அவர்கள் ஜெபமாலை செபித்துக்கொண்டே சென்றனர். அவர்களின் கள்ளமற்ற குரலில் ஒலிக்கப்பட்ட ஜெபமாலை, பொதுமக்களிடையே இறைநம்பிக்கையின் அழகிய சாட்சியமாகப் பார்க்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருத்திருப்பலிக்கு திருச்சி சலேசிய மறைமாநிலத் தலைவர் அருள்பணி தாஸ் கென்னடி SDB அவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்தார். அவர் தனது மறையுரையில் பீடப் பணியாளர்களை ஊக்கப்படுத்தியதோடு, அனைத்து பங்குகளுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். குறிப்பாக, நீண்ட காலமாக இத்திருப்பணியில் ஈடுபட்டு வரும் லூர்து அன்னை திருத்தலத்தைச் சேர்ந்த செல்வி பிரின்சி (12 ஆண்டுகள்) மற்றும் போஸ்கோ மையம், பள்ளித்தம்மத்தைச் சேர்ந்த ஜேசன் (11 ஆண்டுகள்) ஆகியோர் சிறப்புடன் கௌரவிக்கப்பட்டனர்.


மறைக்கல்வி மற்றும் ஆன்மீக அறிவை வளர்க்கும் வகையில் மூன்று முக்கிய பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட்டன. 'இறை அச்சத்துடன் ஆண்டவருக்கு பணிபுரிதல்', 'வழிபாட்டு ஆண்டு, நிறங்கள் மற்றும் அடையாளங்கள்' மற்றும் 'துறவற வாழ்வின் மதிப்பு மற்றும் அழைத்தல்' ஆகிய தலைப்புகளில் அருள்பணி ஆல்பர்ட் SDB, அருள்பணி சூசை அடிமை SDB மற்றும் கிருஷ்ணகிரி புதிய நற்செய்தி அறிவிப்புப் பள்ளியின் இயக்குனர் திரு. ஜெரால்டு ஆகியோர் வகுப்புகளை வழிநடத்தினர்.


மாநாட்டின் நிறைவு விழாவில், தொன் போஸ்கோ தொழிற்பயிற்சி குழுமத்தின் இல்லத் தந்தை அருள்பணி ராபர்ட் சைமன் SDB தலைமை தாங்கி, "புனிதமே ஆன்மாவின் அழகு" என்பதைச் சுட்டிக்காட்டி வாழ்த்துரை வழங்கினார். சிறந்த பங்கேற்பிற்கான சுழற்கோப்பையை திருச்சி சலேசிய மறைமாநிலத் தலைவர் அருள்பணி தாஸ் கென்னடி SDB துகில் விலக்கி காட்சிப்படுத்தினார். அந்தப் புகழ்பெற்ற சுழற்கோப்பையை திண்டுக்கல் சவேரியார்பாளையம் பங்கு தட்டிச் சென்றது. மேலும், லால்குடி மாணக்கால் பங்கு இரண்டாம் இடத்தையும், ஆலங்குளம்-காலவாசல் பங்கு மூன்றாம் இடத்தையும் பெற்று சிறப்புப் பரிசுகளை வென்றன. மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு மகிழ்ச்சிப்படுத்தப்பட்டது.


இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற உறுதுணையாக இருந்த தொன் போஸ்கோ ITI இல்லத் தந்தை அருள்பணி ராபர்ட் சைமன், திருச்சி சலேசிய மறைமாநிலத் தலைவர் அருள்பணி தாஸ் கென்னடி, பொருளாளர் அருள்பணி ரிக்கோபர் ராயன் மற்றும் பங்குத்தந்தையர்கள், அருள்சகோதரர்கள், தொன் போஸ்கோ அலைகள் ஊடகம் மற்றும் கிறிஸ்தோதயம் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


கற்றலும் பக்தியும், மகிழ்ச்சியும் தவழ்ந்த இந்த மாநாடு, இளம் பீடப் பணியாளர்களின் இறை நம்பிக்கையையும், ஆண்டவருக்கு அதிக அன்புடனும் பக்தியுடனும் பணிபுரியும் உறுதியையும் ஆழமாக வேரூன்றச் செய்த மறக்க முடியாத ஒரு ஆன்மீகத் திருவிழாவாக மலர்ந்துள்ளது.


-அருள்பணி. ரூபன் SDB

© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP